`நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது': கரூர் இசைப்பள்ளி ஆசிரியர் பேட்டி

தகாத முறையில் நடக்க முயன்றதாக புகார்: `நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என கரூர் இசைப்பள்ளி ஆசிரியர் கூறினார்.

Update: 2022-06-09 18:38 GMT

கரூர்,

கரூர் அரசு இசைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர் நேற்று கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி எங்கள் பள்ளியில் வழக்கமான ஆய்வு நடைபெற்றது. அதற்காக வந்த கலையியல் அறிவுரைஞர் ஒருவர் என்னை தனி அறைக்கு கூட்டி சென்று, என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். இதனால் நான் பல இடையூறுகளுக்கு ஆளாக்கப்பட்டேன். பின்னர் நடந்த சம்பவங்களை கடிதம் மூலமாக புகார் மனுவாக எழுதி எங்களது துறை இயக்குனருக்கு கடந்த மார்ச் 8-ந்தேதி அனுப்பி இருந்தேன்.அதற்கு மார்ச் 31-ந்தேதி நேரில் சென்று நடந்த சம்பவங்களை முறையிட்டேன். அதன் பின்னர் விசாரணை அமைத்து கடந்த ஏப்ரல் 5-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. பின்னர் 2-வது கட்டமாக விசாகா கமிட்டி மூலம் ஏப்ரல் 22-ந்தேதி அன்று விசாரணை நடைபெற்றது. எனக்கு நீதி கிடைக்கும், தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் என நம்பி இருந்தேன்.இந்நிலையில் நான் கூறிய புகார் அனைத்தும் பொய் எனவும், சம்பந்தப்பட்ட நபர் நிரபராதி என்றும் தகவல் வந்தது. புகார் அளித்த எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. குற்றம் செய்தவருக்கு பதில் கொடுத்து உள்ளனர். இதில் இருந்தே என்ன நடந்திருக்கும் என அனைவரும் புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். எனவே சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்