ஒரு மாதம் கட்டாய விடுமுறைக்கு எதிர்ப்பு கவுரவ விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஒரு மாதம் கட்டாய விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-06-02 21:56 GMT

சேலம், 

ஒரு மாதம் விடுமுறை

சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவில் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதேசமயம், 100-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையான மே மாதத்தில் ஒரு மாதம் விடுமுறை வழங்கப்படும். அந்த மாதத்திற்கு சம்பளம் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படாது.

வேலை நிறுத்த போராட்டம்

இந்தநிலையில், கடந்த மாதம் கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு வந்தனர். இதனால் மே மாதம் பணிக்கு வந்ததால் அதற்கு பதில் ஜூன் மாதம் கட்டாயம் விடுமுறை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுள்ளது. இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட கவுரவ விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியை புறக்கணித்து ேவலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது சம்பந்தமாக கல்லூரி முதல்வர் கலைச்செல்வனை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து மனு ஒன்றையும்அளித்துள்ளனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் கல்லூரியில் தேர்வு நடத்துவது, மாணவர்களின் வருகை பதிவேடு பராமரிப்பு, அக மதிப்பீடு செய்தல் போன்ற பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கவுரவ விரிவுரையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க உயர் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்