அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;
கல்லக்குடி:
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுர விரிவுரையாளர்கள், நேற்று காலை முதல் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2019-ம் ஆண்டு 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு முந்தைய அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட 10 கல்லூரிகளும் அடங்கும். பின்னர் தமிழகத்தின் அனைத்து அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி, கடந்த 1.1.2020-ம் ஆண்டில் இருந்து முன் தேதியிட்டு நிலுவை தொகையுடன் வழங்க 26.2.2021 அன்று அரசு ஆணை வெளியிட்டது. மேலும் அதில் அலுவலகப் பணியாளர்களும் அடங்குவர். இதில் 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த பல்கலைக்கழகங்களும் ஊதியத்தை வழங்கவும் அரசு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டது. இந்த நிலை இன்று வரை தொடர்கிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களும் ஊதியத்தை உயர்த்தி மாதந்தோறும் வழங்கி வருகிறது. ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் அரசாணையை எந்த வகையிலும் பின்பற்றாமலும், நிலுவைத் தொகையை வழங்காமலும், உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை முழுமையாக வழங்காமலும் மாதாமாதம் வழங்கும் ஊதியத்தை இழுத்தடிப்பு செய்தும் முழுமையாக வழங்காமல் உள்ளது. எனவே நிலுவைத் தொகை முழுவதையும் வழங்கவும், உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை அனைவருக்கும் சமமாக வழங்கிடவும், மாதந்தோறும் முறையாக ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். போராட்டத்தை கவுரவ விரிவுரையாளர்கள் சின்னத்தம்பி, இளமதி ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.