பொங்கலூர்
பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை சார்பில் புகையில்லா தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் திருப்பூர், பொங்கலூர், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், குண்டடம், பல்லடம் மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பெண் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிதாக தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டனர். இதில் உழவியல் துறை வல்லுனர் எஸ்.ஆர்.ஸ்ரீ ரங்கசாமி வரவேற்றார். பொங்கலூர் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன், விவசாய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுவதில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தேனீக்களை புகையின்றி கையாளுதல், தேனீக்களை பாதிக்கும் பூச்சிகள், நோய்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் இருந்து பாதுகாத்தல், தேனீப்பெட்டி, தேனீக்களை பாதுகாத்தல் மற்றும் தேன் பிரித்தெடுத்தல் ஆகியவை குறித்து பயிர் பாதுகாப்பு வல்லுனர் ப.கலையரசன் விளக்கி கூறினார். தாவர இனப்பெருக்க மற்றும் மரபியல் துறை பேராசிரியை பி.மீனாகுமாரி, தேனீ வளர்ப்புக்கு தேனீக்களுக்கு உகந்த தாவரங்களை பரிந்துரைத்தார். தேனீ வளர்ப்புக்கு ஏற்ற தேனீக்கள், வெற்றிகரமான தேனீ வளர்ப்பை நடத்த தேவையான தேனீ பெட்டிகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பயிற்சி தொகுப்பு வழங்கப்பட்டது. இறுதியாக கால்நடைத்துறை பேராசிரியை ப.சித்ரா நன்றி கூறினார்.
----------------