42 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் அபாயம்

42 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.

Update: 2022-07-21 18:25 GMT

ஜோலார்பேட்டை பகுதியில் 42 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழும்நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

42 ஆண்டுகள் பழமையானது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சக்கரகுப்பம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 42 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச ஓட்டு வீடு கட்டப்பட்டது. அதில் அவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது அந்த ஓட்டு வீடுகளின் கூரைகள் பழுதடைந்து விட்டதால் மழைக்காலங்களில் மழை நீர் கூரையின் வழியாக வீட்டுக்குள் ஒழுகுவதால் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் ஓட்டின் மீது பிளாஸ்டிக் தார்பாய் மூலம் மூடி வசிக்கின்றனர். ஒரு சிலவீட்டில் மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இங்கு வீட்டின் மத்தியில் கம்புகளை வைத்து மேற்கூரைகள் விழாமல் பாதுகாத்து வருகின்றனர்.

புதிய வீடுகள் வழங்க வேண்டும்

இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் பல வருடங்களாக அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஓட்டு வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெய்த மழையால் இங்குள்ள ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. நல்லவேளையாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. எனவே 42 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் தற்போதும் மேற்கூரைகள் புதுப்பிக்கப்படாமல் இருந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசு சார்பில் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்