வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை; மனைவிக்கும் அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு புகுந்து தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவிக்கும் வெட்டு விழுந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமம் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 33). கூலித்தொழிலாளியான இவர் மீது செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆடு, மணல் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கால்வாய் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வக்கண்ணன் (39). இவர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். மேலும் மாயாண்டி தொடர்பான வழக்குகளையும் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக மாயாண்டி வந்தார். அப்போது அவருக்கும், தெய்வக்கண்ணனுக்கும் இடையே வழக்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அவர்கள் 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் மாயாண்டி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஆஸ்பத்திரியின் முன் நின்ற பஸ்சின் கீழ் படுத்துக்கொண்டு தெய்வக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் அங்கு செல்லாமல் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று மாலை வீட்டில் மாயாண்டி தனது மனைவி செல்வியுடன் (30) பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென்று மாயாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க வந்த செல்விக்கும் வெட்டு விழுந்தது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட மாயாண்டி உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதியம் நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு புகுந்து தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.