பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் படையெடுப்பு: சென்னையில், பஸ்-ரெயில்நிலையங்கள் வெறிச்சோடின

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததின் எதிரொலியாக, சென்னையில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளிலும் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

Update: 2023-01-16 21:59 GMT

சென்னை,

சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் பண்டிகைக்காலங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்தவகையில் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 12-ந்தேதி முதலே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர்.

இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 14-ந்தேதி இரவு வரை சென்னையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் சென்னையே திக்குமுக்காடி போனது.

பஸ்-ரெயில்நிலையங்களில்...

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை முடிந்தநிலையில், சென்னையின் வழக்கமான பரபரப்பு மாயமாகி போயிருக்கிறது. சென்னை என்றாலே பரபரப்பு தான். அந்தளவு கண்ணில் காணும் இடமெல்லாம் மக்கள் பரபரப்பாக நடமாடுவார்கள். பஸ்-ரெயில் நிலையங்களிலும் எப்போதுமே பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். இதெல்லாமே நேற்று பார்க்க முடியவில்லை.

எழும்பூர், சென்டிரல், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளை மிக சொற்பமாகவே பார்க்க முடிந்தது. மின்சார ரெயில்களும் குறைவான பயணிகளுடனேயே பயணித்தன. மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. அதேபோல முக்கிய பஸ்நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் குறைந்திருந்தன. இதனால் நகரில் உள்ள பஸ்-ரெயில்நிலையங்கள் வழக்கமான பரபரப்பின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெறிச்சோடிய சாலைகள்

அதேபோல வழக்கமான நாட்களில் நகரின் சாலைகளில் எப்போதுமே வாகனங்களின் நடமாட்டம் நிறைந்திருக்கும். ஆனால் நேற்றைய பொழுது, சாலைகள் அனைத்துமே வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்களும் குறைவான அளவிலேயே சாலைகளில் பார்க்க முடிந்தது. ஒரு சில இடங்களில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இதனால் வழக்கமாக போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவாக செல்லும் இடத்துக்கு நேற்றையதினம் பயணிகள் சென்றனர். அதேவேளை இரைச்சலும் நேற்று வெகுவாக குறைந்திருந்தது. கோவில்கள், பொழுதுபோக்குத் தலங்கள், மார்க்கெட்டுகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நேற்று வழக்கமான மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடியவில்லை.

கடைகளும் மூடல்

கடைவீதிகளிலும் குறிப்பிட்ட அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தெருக்களில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இப்படி, சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் நகரமே நேற்று வழக்கமான நிலையில் இல்லையோ.. என்றே எண்ணத்தோன்றியது.

பொங்கல் விடுமுறை முடிந்து ஓரிரு நாட்களில் மீண்டும் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு வரத்தொடங்கிவிடுவார்கள். அதன்பின்னர் தான் வழக்கமான சென்னையை மக்கள் காணமுடியும்.

Tags:    

மேலும் செய்திகள்