காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு-குளிக்க, பரிசல் இயக்க தடை
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாகவே காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தது. இதனால் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆயுத பூஜை தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
28 ஆயிரம் கனஅடி தண்ணீர்
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
தீவிர கண்காணிப்பு
இதனிடையே காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஊட்டமலை, நாடார்கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.