வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-02 17:38 GMT

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக- கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

கண்காணிப்பு

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் 15-ந் தேதி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்