பவானி அருகே டிரைவரை தாக்கி ரூ.2 கோடி கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது

பவானி அருகே டிரைவரை தாக்கி ரூ.2 கோடி கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-29 21:37 GMT

பவானி

பவானி அருகே டிரைவரை தாக்கி ரூ.2 கோடி கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.2 கோடி கொள்ளை

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத் சிங் என்கிற மடப்பால். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (வயது 42) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 21-ந் தேதி கோவையில் இருந்து ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கி சொகுசு காரை ஓட்டி சென்றார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் சொகுசு காரை வழிமறித்து டிரைவர் விகாஸ் ராகுலை தாக்கியதுடன், காரையும் கடத்தி சென்றது. பின்னர் கடத்தப்பட்ட காரை ஈரோட்டை அடுத்த கங்காபுரம் பகுதியில் மர்ம கும்பல் விட்டு விட்டு ரூ.2 கோடியை கொள்ளை அடித்து சென்றது. இதையடுத்து கடத்தப்பட்ட அந்த காரை போலீசார் மீட்டதும் தெரிந்ததே.

தனிப்படை

இதுதொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் தலைமையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகையா (சித்தோடு), கிருஷ்ணமூர்த்தி (பவானி), மோகன் (அந்தியூர்), சண்முகசுந்தரம் (அம்மாபேட்டை), ஜீவானந்தம் (மலையம்பாளையம்) ஆகியோரை கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பவானியை அடு்த்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரவேந்தன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 6 பேருடன் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது காரில் வீச்சரிவாள், பட்டாக்கத்திகள், இரும்பு குழாய்கள், உருட்டு கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடி, ரூ.20 ஆயிரம் ஆகியவை இருந்ததை போலீசார் கண்டனர்.

6 பேர் கைது

இதைத்தொடர்ந்து காரில் வந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பியோ பாடி, முண்டஹள்ளி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஜெயன் (45) மற்றும் அவருடைய கூட்டாளிகளான முண்டூர் நச்சுப்புள்ளி கொடுவாங்காடு கொட்டுப்பாரா ஹவுஸ் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (39), பாலக்காடு புதுபரியாரம் வில்லேஜ், நாரப்புள்ளிரா மழுவஞ்சேரி ஹவுஸ் பகுதியை சேர்ந்த டைட்டஸ் (33), அதே பகுதியைச் சேர்ந்த பூலாம்பட்ட வில்லேஜ் குன்ராமி ஹவுஸ் பகுதியை சேர்ந்த விபுல் (31), பாலக்காடு மாவட்டம் தச்சாம்பாரா ஹம்படாதி ஹவுஸ் பகுதியை சேர்ந்த முஜீப் ரகுமான் (37), கரிமா அஞ்சல் சோலா ஹவுஸ் பகுதியை சேர்ந்த மகன் முஜிபூர் ரகுமான் (45) ஆகியோர் என்பதும், கடந்த 21-ந் தேதி கார் டிரைவரை தாக்கி ரூ.2 கோடியை கொள்ளை அடித்த சம்பவத்தில், இவர்களுக்கு தொடர்பு உள்ளதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பணம் எங்கே?

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள கேரள மாநிலம் கோடாளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், சசி, போஸ், ராகுல், ஸ்ரீகாந்த், மற்றும் அடையாளம் தெரியாத ராகுலின் நண்பர் என 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாலும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது? இதில் யார் யாருக்கு தொடர்பு? என்ற கோணத்தில் விசாரிக்க இருப்பதாலும், கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் இன்று (திங்கட்கிழமை) ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்