ரெயிலில் அடிபட்டு அக்காள்-தங்கை பலி

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு அக்காள்-தங்கையான மூதாட்டிகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-10-23 06:45 GMT

அக்காள், தங்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாபட்டு ராஜிவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தா (வயது 67).

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி சாவித்திரி (66). வசந்தாவும், சாவித்திரியும் அக்காள் தங்கையாவர்.

திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் இவரது உறவினர் இறந்ததையொட்டி காரிய நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல இவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவள்ளூருக்கு செல்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை வசந்தா மகன் பிரகாஷ் நேற்று அதிகாலை அழைத்து வந்தார்.

பிளாட்பாரத்தில் இறங்கினர்

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் 3 பேருக்கும் பிரகாஷ் டிக்கெட் வாங்க டிக்கெட் கவுண்டருக்கு சென்றார்.

பிரகாஷ் டிக்ெகட் எடுத்து வருவதற்குள் இருவரும் ஆபத்தை உணராமல் பிளாட்பாரத்தில் இறங்கி விட்டனர். அப்போது டிக்கெட் எடுத்துக்கொண்டு பிரகாசும் வந்து விட்டார்.

இந்த நிலையில் அவர்கள் 3-வது பிளாட்பாரத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க 2-வது பிளாட்பாரத்தில் ஏற முயன்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கர்நாடக மாநிலம் மங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் அடிபட்டதில் வசந்தா, சாவித்திரி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடல்கள் சிதறின

இந்த சம்பவத்தில் வசந்தா பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது ரெயில் மோதியதில் அவரது உடல் துண்டாகி பாதி உடல் பிளாட்பாரத்திலும் மீதமுள்ள பாதி உடல் தண்டவாளத்திலும் கிடந்தது.

மேலும் சாவித்திரி உடல் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றதில் உடல் உருக்குலைந்து கிடந்தது. தன் கண்ணெதிரிலேயே தாய் வசந்தாவும், சித்தி சாவித்திரியும் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறினார். ரெயிலில் அடிபட்டு அக்காள்-தங்கை இறந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தண்டவாளத்தில் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்த வசந்தா, சாவித்திரி உடல்களை அவர்கள் சேகரித்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடரும் சம்பவம்

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இதுபோன்ற சோக சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் செல்கின்றன. சில ரெயில்கள் நின்றாலும் டிக்கெட் கவுண்டர் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நிற்காமல் 2 நடைமேடைகளை கடந்து நிற்பதால் அவசரமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு தண்டவாளத்ைத கடக்கும் பயணிகளும் இறந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடுதலாக ஒரு நடைமேம்பாலம் அல்லது ஆம்பூரில் நிற்கும் ரெயில்கள் டிக்கெட் கவுண்டர் அருகாமையில் உள்ள பிளாட்பாரங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்