இந்து அமைப்பினர் போராட்டம்; 72 பேர் கைது

சங்கரன்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-25 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் அறிவிப்பு

சங்கரன்கோவிலில் சமூக நீதிப்பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற இருந்தது. இதை கண்டித்து இந்து முன்னணி, பா.ஜ.க., அகில பாரத அய்யப்பா சேவா சங்கம், சைவ சித்தாந்த சபை உள்ளிட்ட இந்து அமைப்புகள் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ள ரதவீதிகளில் தேவார பாடல்களை பாடுவதாக போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் கோவில் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தள்ளுமுள்ளு

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுதீர், சுப்பையா, அசோக் மற்றும் போலீசார், இந்து அமைப்புகளின் முக்கிய நபர்களை மட்டும் நேற்றுபேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

அப்போது கோவில் தேர் மற்றும் கோவில் முன்பு கட்டி இருந்த திராவிடர் கழக கொடியை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 12 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது சங்கரன்கோவில் நகர பா.ஜ.க. தலைவர் கணேசன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாடல்கள் பாடி போராட்டம்

இந்த சம்பவத்தை கண்டித்து செங்குந்தர் முன்னேற்ற சங்க செயலாளர் மாரிமுத்து, இந்து முன்னணியைச் சேர்ந்த ஆறுமுகசாமி, ஆறுமுகம், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராஜா, நகர இளைஞரணி விக்னேஷ், பொருளாளர் மணிகண்டன் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோவில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் தரையில் அமர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரவில் இந்து முன்னணி மாநில இணை செயலாளர் பொன்னையா கோவிலை விட்டு வெளியே செல்லும்போது போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

கைது

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவில் மண்டபத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்து அமைப்பினர் கோமதி அம்மன் உருவப்படத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர்

அப்போது, அவர்களை கோவில் அருகே கயிறு கட்டி போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இந்து அமைப்புகளுக்கும், போலீசாருக்கு மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து அமைப்பு சார்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்