கோவில்பட்டி கோவில் முன்பு பாலத்தை அகற்றியதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

கோவில்பட்டி கோவில் முன்பு பாலத்தை அகற்றியதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-12-29 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மெயின் ரோடு நீர்வழிப் பாதைக்கு மேல் புறம் வணிக வைசிய சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் முன்புறம் கோவிலுக்கு செல்வதற்காக அந்த சமுதாய மக்கள் சார்பில் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் அகற்றிவிட்டனர்.

இந்த இடத்தை நேற்று இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி. பி. ஜெயக்குமார் பார்வையிட்டார். அவருடன் நெல்லை கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், நகரத் தலைவர் சீனிவாசன், நகரச் செயலாளர் சரவணன் மற்றும் வணிக வைசிய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர் வி. பி. ஜெயக்குமார் கூறுகையில், இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக வணிக வைசிக சமுதாய மக்கள் சொந்த செலவில் பாலம் கட்டினா். இந்த பாலத்தை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதே நீர் நிலை பகுதியில் ஐந்து பாலங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். கோவிலில் வடபுறம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கல் பாலம் உள்ளது. இந்த நிலையில் கோவில் முன்பு கட்டப்பட்ட பாலத்தை, உள்நோக்கத்துடன் அதிகாரிகள் அகற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்