இந்து முன்னணி அமைப்பினர் மறியல் செய்ய முயற்சி

விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்காததால் இந்து முன்னணி அமைப்பினர் மறியல் செய்ய முயன்றனர்.;

Update: 2023-09-18 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் பலர், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் மற்றும் காணை, கெடார், வளவனூர், கண்டமங்கலம் என விழுப்புரம் கோட்ட பகுதிகளில் 250 இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவதற்காக கடந்த 16-ந் தேதியன்று விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர். ஆனால் ஒரு இடத்தில்கூட சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது.

மறியல் செய்ய முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி அமைப்பினர் நேற்று பகல் 12 மணியளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

உடனே அவர்களை விழுப்புரம் மேற்கு போலீசார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அதன்பேரில் அங்கு சென்ற இந்து முன்னணி அமைப்பினரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மூர்த்தி, ஆனந்தன் மற்றும் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கேட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள், தங்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். அதன் பின்னர் அவர்கள், முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்