தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழிகளையும் திணிக்க முடியாது என்றும், இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது என்றும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
சென்னை கிண்டி ராஜ்பவன் வளாகத்தில் உள்ள தர்பார் அரங்கில், வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படிப்புகளை படிக்கும் தமிழ் அல்லாத மாணவ-மாணவிகளுடன் 'தமிழ்நாடு தர்ஷன்' என்ற நிகழ்ச்சியின் கீழ் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது:-
திணிக்க முடியாது
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டுக்கு 3,500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது. மற்ற எந்த மொழிகளும் தொன்மை வாய்ந்ததாக இல்லை. இதில் சமஸ்கிருத மொழி மட்டும் பழங்காலத்தில் தமிழ் மொழிக்கு நெருக்கமாக இருந்தது. தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழிகளையும் திணிக்க முடியாது.
தமிழ் மொழியின் வரலாற்றில் இமாலயா, ஹவுரா, மதுரா, காசி நாகரீகங்களும், தொன்மையும் அடங்கியுள்ளது. தமிழ் மொழிக்கும், காசிக்கும் இடையேயான பிணைப்பை விளக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் அண்மையில் நடைபெற்றது. மேலும் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
ஆழமாக படிக்க வேண்டும்
அந்தவகையில் தமிழை ஆழமாக படிக்க வேண்டும். தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும். அத்தோடு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படிப்புகளை படிக்கும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ்பவன் சார்பில் தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும்.
தமிழில் உயர்கல்வி படிக்க விரும்பும் தமிழ் அல்லாத மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் படிக்க வேண்டும். திருக்குறள் போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு திருவாரூர் தேர் மாதிரியும், திருக்குறள் புத்தகமும் நினைவு பரிசாக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.