சாலைவசதி கேட்டு மலைவாழ் மக்கள் உண்ணாவிரதம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு,
சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
பட்டாவாக மாறிய பாதை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ஆத்திப்பாடி மலை கிராமத்திற்கு உட்பட்ட கீழ் வலசை பகுதியில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. பாதை அமைந்த இடத்துக்கு அந்த நபர் வருவாய்த்துறையினர் மூலம் பட்டா பெற்று உள்ளார்.
இதனால் இந்த மலைவாழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வர சிரமப்பட்டு வந்தனர். எனவே தங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டு கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரதம்
எனவே சாலை வசதி செய்து தரக் கோரி கீழ் வலசை மலைவாழ் மக்கள் நேற்று முன்தினம் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தாசில்தார் முகமது ரகுப், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், செல்வராஜ் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அலுவலகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை சிறிது நேரத்தில் கைவிட்டு கலைந்து சென்றனர்.