உயர்கல்வி ஆராய்ச்சி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்- அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தல்

உயர்கல்வி ஆராய்ச்சி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அறிவியல் கூட்டமைப்பு வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-07-19 20:45 GMT


அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொது செயலாளர் ஆஷா மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உயர்கல்வி ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்து வரும், மத்திய அறிவியல் பொறியியல் கழகச்சட்டம் 2008-ன் கீழ் ஆராய்ச்சி நிதியம் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சட்டம் திருத்தப்பட்டு தேசிய ஆய்வு நிதிய மசோதா-2023 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா அரசின் முழுமையான நிதி பெறும் அமைப்பாக இல்லாமல், தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர் அமைப்புகள், சர்வதேச நிதி அமைப்புகளை சேர்ந்த நிதிசார்புள்ள அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

இதில், முடிவெடுக்கும் அதிகாரம் என்பது பொறுப்பு சார்ந்தது என்ற அடிப்படையில் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிதிய குழுவில், அறிவியல் தொழில்நுட்ப கழகம், கல்வி அமைச்சர்கள் ஆகியோர் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் கட்டுப்பாட்டில்தான் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளும், பயன்பாடுகளும் தீர்மானிக்கப்படும். ஆரம்பகட்டத்தில் இந்த நிதியம் என்பது மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது, உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து துறைசார் ஆய்வுகளுக்கும் நிதி வழங்கும் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 5 வருடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த நிதியில் 72 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும், 28 சதவீதம் அரசு துறைகளுக்கும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், நிதி வழங்கும் கட்டமைப்பு என்பது பாஹ்-டோல் சட்டத்தின் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்கின்றனர். இதனை கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வசதியான நிறுவனங்கள் தங்களின் அதிகார பலத்தின் மூலம் மத்திய அரசிடம் நிதி பெறும் வாய்ப்புள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் தற்போது ஒரு சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன.

உலகிலேயே நமது நாட்டில் மட்டுமே உயர்கல்வி ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு உள்நாட்டு உற்பத்தியில் 0.65 சதவீதம் மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. 2015 ல் 39.96 சதவீதமாக இருந்த முழு நேர ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 2018-ல் 36.18 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு நிதியுதவி பெறும் பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான நிதியுதவி என்பது 2015-ல் 30.32 சதவீதத்தில் இருந்து 2018-ல் 23.13 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே இந்த குழுவில் மாநில பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

எனவே தேசிய ஆய்வு நிதிய மசோதா 2023-ஐ மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்