உயர்கல்வி-வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

விளாங்குடி அருகே உயர்கல்வி-வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-06-30 19:30 GMT

அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் "கல்லூரி கனவு- நான் முதல்வன்" உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ரமண சரஸ்வதி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், படிப்பு முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களிடம் கட்டணம் பெற்று தனியார் அமைப்புகள் மூலம் கல்வி வழிகாட்டி வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு அமைவதில்லை. அதனால், மாணவர்கள் பள்ளி படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பு என்ன படிக்கலாம் என மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இங்கு மாணவர்களுக்கு கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கையேட்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு பல்வேறு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் வடிவமைக்கப்பட்டு, தரப்பட்டுள்ளது. இதில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உட்பிரிவுகளும் அவற்றுக்கான வேலைவாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. இதனை அனைத்து மாணவர்களும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, சிறந்த முறையில் மேற்படிப்பு பயின்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்