என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-09-17 20:16 GMT


மதுரை மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்த செல்வகுமார், கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 19.7.2020 அன்று பூதகுடி கண்மாய் கரையில் எனது சகோதரரை சந்திப்பதற்காக காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென வண்டியை நிறுத்தி எனது செல்போனை கேட்டனர்.

தர மறுத்ததால், அவர்களில் ஒருவன் வைத்திருந்த கத்தியால் எனது வலது காலில் வெட்டினான். கைகளிலும் தாக்கிவிட்டு எனது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். எனது காலில் ஏற்பட்ட காயத்தில் மயங்கிய என்னை, சிலர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனது கையிலும், வலது காலிலும் மாவுக்கட்டு போட்டுவிட்டு மறுநாள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் எனக்கு வலது காலில் கடுமையான வலி ஏற்பட்டது.

இதனால் மீண்டும் ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை உள்நோயாளியாக அனுமதித்தனர். என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனது காலில் ஏற்பட்ட காயத்தினால் தொற்று ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. உடனடியாக வலது கால் அகற்றப்படவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்தனர்.

பின்னர் எனது வலது காலில் முழங்கால் வரை நீக்கப்பட்டுவிட்டது. இதனால் ஒட்டுமொத்த எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை காரணமாக என் வாழ்க்கை பாழாகிவிட்டது. எனவே உரிய இழப்பீட்டை வழங்கவும், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி, மனுதாரரின் காலில் ஏற்பட்ட காயத்திற்காக உடனடியாக சிகிச்சை அளிக்காதது டாக்டர்களின் சேவைக்குறைபாடு. இதனால் மனுதாரரின் என்ஜினீயரிங் கனவு தகர்ந்துவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் கால் துண்டிக்கப்பட்டதற்காக ரூ.10 லட்சத்தை இழப்பீடாக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோர் 12 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்