உயர்மின் அழுத்தம் - 20 வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன ...குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயம்

குரோம்பேட்டையில் உயர்மின் அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்காயம் அடைந்தனர்.

Update: 2023-08-29 07:54 GMT

குரோம்பேட்டை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் தெரு, துர்கா நகரில் நேற்று முன்தினம் இரவு திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார ஒயர்கள் எரிந்தன. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கொளஞ்சி (வயது 53) என்பவரது வீட்டிலும் உயர்மின் அழுத்தம் காரணமாக மின்சார ஒயர் எரிந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கொளஞ்சி, கர்ப்பிணியான சித்ரா (30), அஜய்குமார் (2) மற்றும் 4 மாத குழந்தை ரோகித் ஆகிய 4 பேர் மீது மின்ஒயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு உடலில் லேசாக தீக்காயம் ஏற்பட்டது.

வீட்டில் இருந்த மின்ஒயர்கள் எரிந்ததால் பரவிய புகையால் 4 பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், உயர்மின் அழுத்தத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்