உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வள்ளிராசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பழனிசாமி, பொருளாளர் பொன்ராஜ், மகளிர் அணி அமைப்பாளர் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது பதவி உயர்விற்கான ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். கடந்த 3 ஊதியக்குழுக்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் ரூ.500, ரூ.750 மற்றும் ரூ.2,000 என தனி ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ரூ.2000-திற்கு அகவிலைப்படி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.