வீரன் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா
திருவண்ணாமலையில் வீரன் அழகு முத்துக்கோன் 265-வது குரு பூஜை விழா நடைபெற்றது.;
திருவண்ணாமலை, ஜூலை.13-
திருவண்ணாமலையில் வீரன் அழகு முத்துக்கோன் 265-வது குரு பூஜை விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரரான வீரன் அழகு முத்துக்கோன் 265-வது குரு பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழில் அதிபர் கே.எஸ்.விஜயராஜி தலைமை தாங்கினார். தி.மு.க.ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். டி.ஏ.ஏழுமலை வரவேற்றார்.
அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வீரன் அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தி.மு.க. மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளாகலையரசன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
அதேபோல் திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகளில் தி.மு.க.மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.கலைமணி, நகர நிர்வாகி சி.சண்முகம், இல.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு யாதவர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இருந்து மேளதாளங்கள் முழங்க மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.