விற்பனைக்காக பிடிக்கப்படும்முதிர்வு கோழியின் எடை 1,450 கிராமாக இருக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Update: 2023-03-11 19:00 GMT

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் நேற்று முட்டை வியாபாரிகள், முதிர்வு கோழி வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோழிப்பண்ணைகளில் வியாபாரிகளால் விற்பனைக்காக முதிர்வு கோழி பிடிக்கப்படும் போது, ஒரு கோழியின் சராசரி குறைந்தபட்ச எடை 1,450 கிராம் ஆக இருக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. கோழி பிடிக்கப்படும்போது ஈரப்பதத்திற்காக கழிக்கப்படும் 40 கிராம் இனிவரும் நாட்களில் கழிக்கப்படாது. வரும் காலங்களில் ரொக்க தள்ளுபடி என்பது இருக்காது.

முதிர்வு கோழி பிடிக்க வரும் வண்டியில் செயற்கையாக வண்டியின் எடையை கூடுதலாக காட்டும் அம்சங்கள் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வண்டிக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு பண்ணையாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து, ஒரு வார கால அளவில் முடிவு தெரிவிக்கிறோம் என முதிர்வு கோழி வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சென்னை வியாபாரிகள் அனைவரையும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் சந்தித்து சென்னை விற்பனையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் வரும் காலங்களில் மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளா லயன் வியாபாரிகள் அனைவரையும் அழைத்து லயன் மார்ஜின் குறித்து விவாதிக்க முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்