இறக்கை அழுகல் நோயால் கோழிகள் சாவு-ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை

Update: 2022-10-22 18:45 GMT


நாமக்கல்:

இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறந்து வருவதால், பண்ணையாளர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

அடுத்த 4 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 20 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 26-ந் தேதி மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.

அப்னா நச்சு பூஞ்சை

காற்று மணிக்கு 6 கி.மீ.வேகத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

அப்னா நச்சு பூஞ்சை காளான் மூலம் உற்பத்தி ஆகிறது. கால்நடை தீவனங்களில் அப்னா நச்சு இருந்தால், உற்பத்தி திறன் மட்டும் இல்லாமல், கல்லீரல் செயல்பாடு மற்றும் கருச்சிதைவு உள்ளிட்ட இனபெருக்க கோளாறுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும். எனவே கால்நடை தீவன மூலப்பொருட்களில் உள்ள நச்சின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.

இறக்கை அழுகல் நோய்

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளன என தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டேப்லோகாக்கஸ் மற்றும் ஈகோலை கிருமிகளின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மழைக்காலமாக இருப்பதால், தீவனத்தில் பூஞ்சை நச்சுகளின் தாக்கம் வர வாய்ப்பு உள்ளதால், தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்