திருச்சியில் மீண்டும் வேகமெடுக்கும் ஹெல்மெட் அபராதம்
திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மீண்டும் வேகமெடுத்துள்ளது.
திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மீண்டும் வேகமெடுத்துள்ளது.
தீவிர வாகன சோதனை
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதனை தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்லும் இளைஞர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் சிக்கினார்கள். இதேபோல் மாநகர பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அபராதம்
தற்போது இந்த பணி முன்பை விட மீண்டும் வேகமெடுத்துள்ளது. முன்பெல்லாம் ஒரு சில முக்கிய சந்திப்புகளில் மட்டும் வாகன சோதனை நடத்தப்படும். தற்போது மாநகரில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மாநகர போலீசார் தினந்தோறும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாதவர்களை விரட்டி பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.