தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். 550 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-10-09 18:45 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு கொடுக்க மக்கள் குவிந்ததால் மனுக்கள் பதிவு செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து மனு கொடுத்தனர்.

மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 550 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பிளஸ்-2 மாணவி

இதில், கடமலை-மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், முத்துநகர், அஞ்சரபுளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் கிராமங்களில் 75 ஆண்டுகளுக்கும் மேல் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு பட்டா செல்லாது என்று தற்போது அதிகாரிகள் கூறுகின்றனர். எங்கள் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பட்டாவில் உள்ள நிலங்களை அளவீடு செய்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

கூடலூரை சேர்ந்த பாண்டியன் மனைவி மாலதி, விவசாயிகளுடன் வந்து கொடுத்த மனுவில், 'எனது கணவர் பாண்டியன், வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தபோது மயங்கி விழுந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆதரவற்று இருக்கும் எனது குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடுத்த மனுவில், 'தூக்கமின்மை பிரச்சினையால் சிகிச்சை பெற்று வரும் நான் பள்ளி வகுப்பறையில் தூங்கி விட்டேன் என்று ஆசிரியை ஒருவர் தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதேபோல், கோம்பையில் பள்ளி அருகில் செயல்படும் மதுபான கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்