விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-14 18:45 GMT

விழுப்புரம்

விவசாயி

விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 73). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி கீதா(59), மகன் பிரகாஷ்(36) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே அறையில் இருந்த பீரோவை பார்த்தபோது கதவுகள் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

நகை- பணம் கொள்ளை

மேலும் பீரோவில் இருந்த 16½ பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் என கூறப்படுகிறது. உடனே இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீஸ் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்