நகைக்கடையில் 281 பவுன் கொள்ளை: 30 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளிச்சென்றனர்

நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2022-08-08 20:45 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47). இவர் சேலம் மெயின்ரோட்டில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூரில் மற்றொரு நகைக்கடையை திறந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மாலை 6 மணிக்கு அந்த புதிய கடையில் இருந்த அனைத்து நகைகளையும் கடையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டினார். பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பூட்டு உடைக்கப்பட்டு...

இந்த நிலையில் நேற்று காலை கடை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த லோகநாதன் பதறியடித்து கொண்டு கடைக்கு வந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் அறை பூட்டும் திறந்து கிடந்தன.

மேலும் அங்கிருந்த மொத்தம் 281 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி என மொத்தம் 30 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கமும் மாயமாகி இருந்தது.

ரூ.1.35 கோடி

இதில் அதிர்ச்சியில் உறைந்த லோநாதன், சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லோகநாதன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளையர்கள் கடை அருகில் உள்ள வங்கி முன் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் நகைக்கடை முன் இருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்து இருந்ததும் தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்