பள்ளி, கல்லூரி நேரங்களில் கனரக வாகனங்கள் வர தடை

போக்குவரத்து நெரிசலை குறைக்க பள்ளி, கல்லூரி நேரங்களில் குடியாத்தம் நகருக்குள் 2 மணி நேரம் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-13 17:22 GMT

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடியாத்தம் நகரம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன. இதனால் குடியாத்தத்தில் எப்போதும் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

எனவே பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் சமயத்தில் கனரக வாகனங்களை சில மணி நேரம் நகருக்குள் வருவதற்கு தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இதுகுறித்து கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் உள்ளிட்ட போலீசாருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்.

கனரக வாகனங்களுக்கு தடை

தொடர்ந்து குடியாத்தம் நோக்கி வரும் கனரக வாகனங்களை குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமம் அருகே காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நவீன்யுவராஜ் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் நகருக்குள் வரும் கனரக வாகனங்களை பாக்கம் கிராமம் அருகே நிறுத்தி, லாரி டிரைவர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

அதனால் கனரக வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் குடியாத்தம் நகரை கடந்து சென்றது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்திலும், மாலையில் பள்ளி முடிந்து திரும்பும் நேரத்திலும் நெரிசல் குறைந்து காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்