பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல்

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-06-03 11:27 GMT

பல்லடம்

பல்லடத்தில், முகூர்த்த நாளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

முகூர்த்த நாள்

பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விேஷச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது.

புறவழிச்சாலை திட்டம்

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை இப்போது உள்ள ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்தாலே ஓரளவு போக்குவரத்து நெரிசல் தீரும். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வருவதில்லை.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்