பல்லடம்
பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.
போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, "பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்றனர்.