மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு

கடலூர் மாவட்டம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும்அவதி அடைந்தனர்

Update: 2022-12-14 18:45 GMT

நெல்லிக்குப்பம்

பனிப்பொழிவு

கடலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்தது. தொடர்ந்து வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நாளை மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசியது. நேற்றும் அதிகாலையில் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது. இதன் காரணமாக நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை பனி குறையாமல் காணப்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் சிரமப்பட்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை ஓட்டி சென்றதை காண முடிந்தது. அதேபோல் ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் பனிமூட்டம் சூழ்ந்ததால் ரெயில் என்ஜீனில் முகப்பு விளக்குகள் ஒளிர்ந்தபடியே சென்றதை பார்க்க முடிந்தது.

கடும்குளிரை தாங்க முடியாமல் பாதசாரிகள் சுவெட்டர், மப்லர் மற்றும் கம்பளி ஆடைகள் ஆகியவற்றை அணிந்தபடியே சென்றனர். அதிகாலை நேரங்களில் டீ கடைகளில் டீ, காபி வியாபாரம் பரபரப்பாக விற்பனையானது. மேலும் சாலையோர வாசிகள் சிலர் விறகுகளுக்கு நெருப்பு வைத்து குளிர்காய்ந்தனர்.

சீதோஷ்ணமாற்றம்

அதேபோல் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

காலை நேரங்களில் கடும் பனி பொழிவு, பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீரென பெய்யும் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று என இப்படி சீதோஷ்ண மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்