தூத்துக்குடியில் பலத்த மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Update: 2022-11-29 20:49 GMT

தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கேரள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் மழை தீவிரமடைந்தது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்தது. சுமார் 9 மணி வரை நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதே நேரத்தில் பல பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டதால், மீண்டும் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதேபோல் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

தேனி

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. தேனி, பெரியகுளம், சோத்துப்பாறை, மஞ்சளாறு, போடி, வீரபாண்டி போன்ற இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய சாரல் மழை பெய்தது.

பின்னர் நேற்று அதிகாலையில் இருந்து காலை 8 மணி வரையும் கனமழை நீடித்தது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. குறிப்பாக தாயில்பட்டி, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்