பர்கூரில் பலத்த மழை:குளமாக காட்சி அளித்த பஸ் நிலையம்-பயணிகள் அவதி

பர்கூரில் பலத்த மழை பெய்தது. பஸ் நிலையத்தில் மழைநீர், சாக்கடை கழிவுநீருடன் கலந்து தேங்கி நின்று குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT

பர்கூர்:

பலத்த மழை

பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாள் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றும் வீசியது. பர்கூர் பேரூராட்சி பஸ் நிலைய பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இந்த கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து விடுகின்றன. மேலும் பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களின் மீது கடைகள் வைத்து உள்ளனர். இதனால் முறையாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வார முடியாமல் தூய்மை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

குளமாக காட்சி அளித்தது

இதனால் ஏற்படும் அடைப்புகளாலும், நேற்று பெய்த மழையாலும் தண்ணீரும், கழிவுநீரும் பர்கூர் பஸ் நிலையத்தில் சுமார் 2 அடிக்கு மேல் தேங்கி நின்றது. இதனால் பஸ் நிலைய பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், சேறும், சகதியுமாக குளம் போல் காட்சி அளித்தது.

இதுதவிர கணேஷ் நகர், சின்ன பர்கூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரும், மழைநீரும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பர்கூர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தேங்கி நின்றது. இதேபோல் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் நடமாடுவதற்கும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்