நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன;2 வீடுகள் சேதம்-அவலாஞ்சியில் 18 சென்டி மீட்டர் மழை பதிவு

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவலாஞ்சியில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை கொட்டியது.

Update: 2023-07-06 00:30 GMT


ஊட்டி


நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவலாஞ்சியில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை கொட்டியது.


மிக கனமழை எச்சரிக்கை


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து கமாண்டன்ட் பிரவீன் எஸ் பிரசாத் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தனர். இதேபோல் கோவை ஈரோடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு படையினர் 32 பேர் வந்துள்ளனர்.


8 இடங்களில் மரங்கள் சாய்ந்தது


வானிலை ஆய்வு மைய கணிப்பிற்கு மாறாக 3 மற்றும் 4-ந் தேதிகளில் நீலகிரியில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதற்கு இடையே நேற்று முன்தினம் முதல் வானம் கரு மேகங்களுடன் இருட்டி காணப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. அவலாஞ்சியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 180 மில்லி மீட்டர் மழை பதிவானது.


இந்த மழை காரணமாக பர்னில் சாலை, குழிச்சோலை சாலை, சி.எஸ்.ஐ பள்ளி பகுதி, தலைக்குந்தாவிலிருந்து அத்திகல் செல்லும் சாலை, ஓவேலி -பாலவாடி சாலை, தேவர்சோலை -சர்க்கார்மூலை, சேரங்கோடு அடுத்த அய்யன்கொள்ளியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலை, நெல்லியாலம் அடுத்த சேலக்குன்னு ஆகிய 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஊட்டி தீயணைப்பு துறை அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.


2 வீடுகள் சேதம்


இதேபோல் இந்த மழைக்கு பந்தலூரை சேர்ந்த கிருஷ்ணன், குன்னூரை சேர்ந்த கண்ணம்மாள் ஆகியோரின் வீடுகள் சேதம் அடைந்தன.


இதேபோல் ஓவேலியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.


மேலும் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


குறிப்பாக காலையில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவ- மாணவிகள் லேசான மலையில் குளிரில் நடுங்கியவாறு சிரமத்துடன் சென்றனர். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டினர்.


ஊட்டியில் நேற்று 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 89 சதவீதம் இருந்தது.


மின்தடை


பந்தலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, பிதிர்காடு உள்பட பல கிராமங்களில் பெய்த மழை காரணமாக விடிய விடிய மின் தடை ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், அய்யன்கொல்லி உதவி மின் பொறியாளர் தமிழரசன் ஆகியோர் மேற்பார்வையில் சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


லாரி மீது விழுந்த மரம்


குன்னூரில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது குன்னூர் கோத்தகிரி சாலையிலுள்ள லாரி நிலையத்தில் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக நேற்று காலை 7 மணியளவில் சாலை ஓரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து லாரி மீது விழுந்தது. இதனால் குன்னூர் -கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 பேர் கொண்ட தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்னறை மணி நேரத்திற்கு பின்பு மரம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் குன்னூர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


மரக்கிளை விழுந்து முதியவர் படுகாயம்


கூடலூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் சர்க்கார்மூலா பகுதியில் மரம் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மழையை பொருட்படுத்தாது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதேபோல் கூடலூர் அருகே ஓ வேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் (வயது 63) என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரக்கிளை ஒன்று முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-


அவலாஞ்சி-180


ஊட்டி- 8


நடுவட்டம் -28


கிளன்மார்கன் -15


குந்தா -28


எமரால்டு -40


அப்பர் பவானி -97


பாலாகொலா- 18


குன்னூர் -8


கேத்தி -7


எடப்பள்ளி -13


கோத்தகிரி- 10


தேவாலா -28


கூடலூர் -18


ஓவேலி -32


சேரங்கோடு -38


பந்தலூர் -72.







Tags:    

மேலும் செய்திகள்