கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது

தரைப்பாலம் உடைந்தது

Update: 2022-09-02 16:15 GMT

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

தரைப்பாலம் உடைந்தது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த மழை காரணமாக கடம்பூரை அடுத்த குரும்பூர் மாமரதொட்டி அருகே உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து விட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த தரைப்பாலம் உடைந்ததால் குரும்பூரில் இருந்து மாமரதொட்டி கிராமத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை.

எனினும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்று வருகிறார்கள். எனவே உடைந்த தரைப்பாலத்துக்கு பதில் புதிதாக பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்