ஊட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
ஊட்டியில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதியடைந்தனர்.;
ஊட்டி
ஊட்டியில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதியடைந்தனர்.
பலத்த மழை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது.
ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றன. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, மழைக்கு ஒதுங்கி நின்றனர். கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு வீட்டிற்கு சென்றனர்.
மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது
பலத்த மழையின் காரணமாக ஊட்டி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா சாலையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் கழிவுநீருடன் சேர்ந்த மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் அந்த வழியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்களில் குப்பைகள் படிந்தன. இதேபோல் தாவரவியல் பூங்கா பகுதி சேறும், சகதியுமாக மாறியதால் அங்கே வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சாலைகளில் இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ரெயில்வே பாலத்தின் கீழ்
இதேபோல் பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன.
மேலும் அந்த வழியாக சென்ற ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் சிக்கின. இதையடுத்து ஆட்டோவில் இருந்த ஒரு பெண் உள்பட 4 பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதன்பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் ஆட்டோவை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதேபோல் பஸ் நிலையம், ஏ.டி.சி. மைதானம் உள்பட பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.
மார்க்கெட்டிற்குள் புகுந்த தண்ணீர் மாலை 4 மணிக்கு பின்னர் வடிந்தது. இதையடுத்து ஆனாலும் ஆட்கள் நடமாட்டத்தால் மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண் சரிவு
பலத்த மழையின் காரணமாக எட்டின் சாலையில் இருந்து ஜே.எஸ்.எஸ். கல்லூரி செல்லும் வழியில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக பொக்லைன் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர். இதேபோல் லவ்டேல் சந்திப்பு உள்பட மேலும் ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது.