கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update:2023-03-25 00:15 IST

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பகலில் வெயிலிலும், இரவு வெப்பத்திலும் தூக்கம் இன்றி தவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பின்னர் மதியம் 12 மணி அளவில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன. லேசாக குளிர்ந்த காற்று வீசியது. 12.50 மணிக்கு லேசான சாரல் மழை தொடங்கி, பின்னர் இடி- மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.

இதனால் கோவில்பட்டி நகரில் வாறுகால்களில் தேங்கியிருந்த கழிவுகள் அடித்து வரப்பட்டு, சாலைகளில் ஓடிய மழை நீருடன் கலந்து கருப்பு நிறமாக சென்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

சாலைகளில் வெள்ளமாக ஓடிய மழை நீரில் வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மழையில் நனைந்தபடி ஓட்டிச் சென்றார்கள்.

கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்திய நிலையில் நேற்று சுமார் 1½ மணி நேரம் பெய்த இந்த மழையால் கோவில்பட்டி நகரம் குளிர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி நகரில் நேற்று 29 மில்லிமீட்டர் மழை பதிவாகியதாக தாசில்தார் சுசிலா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்