இடி, மின்னலுடன் பலத்த மழை

செஞ்சி, மயிலம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பிரம்மதேசம் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்

Update: 2023-05-30 18:45 GMT

செஞ்சி

செஞ்சியில் மழை

தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதையடுத்து செஞ்சியில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலம் பகுதியில்

அதேபோல் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலை 6.30 மணியளவில் திடீரென வானத்தில் மேகமூட்டம் உருவாகி குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் ரெட்டணை, தீவனூர், கொங்காப்பட்டு, அவ்வையார்குப்பம், பெரும்பாக்கம், தழுதாளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. மழையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மயிலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1½ மணிநேரம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மின்னல் தாக்கி பெண் பலி

பிரம்மதேசம் அருகே மின்னல்தாக்கி பெண் இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

பிரம்மதேசத்தை அடுத்த முன்னூர் கிராம ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னராசு மனைவி அலமேலு(வயது 45). இவருக்கு 2 மகன் மற்றும் மகள் உள்ளனர். அலமேலு முன்னூர் கிராம நடு ஏரி அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வந்தார்.

நேற்று அவர் தனது மகன் குமரனுடன் நிலத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வானத்தில் கருமேகங்கள் திரண்டு இடியும், மின்னலுமாக காணப்பட்டது. இதில் அலமேலு மற்றும் அவரது மகன் மீது திடீரென மின்னல் ஒன்று தாக்கியது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த அவரது மகன் குமரனை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்