இடி-மின்னலுடன் பலத்த மழை
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 12 செ.மீ. மழை கொட்டியது.
கடலூர்:
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூரில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
இதற்கிடையே இரவு 7.45 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால் பெண்ணாடம், கம்மாபுரம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்சம்
இதேபோல் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, விருத்தாசலம் உள்பட மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 12.3 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் செ.மீட்டரில் வருமாறு:-
கீழ்செருவாய்- 10.2
பெலாந்துறை- 9.7
மே.மாத்தூர்- 8
சிதம்பரம்- 7.3
லால்பேட்டை- 6
வேப்பூர் - 4.3
ஸ்ரீமுஷ்ணம்- 4.1
கடலூர்- 3.6
குப்பநத்தம்- 3
லக்கூர்-2.9
சேத்தியாத்தோப்பு - 2.8
புவனகிரி - 2.8
விருத்தாசலம்- 1.8
பரங்கிப்பேட்டை- 1.5
பண்ருட்டி- 1