தேனியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை:ஆறாக மாறிய சாலைகள்; பஸ் நிலையத்துக்குள் வெள்ளம்

தேனியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலைகள் ஆறாக மாறியதுடன், பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

கனமழை

தேனி நகரில் சில நாட்களாக கோடை வெயில் போல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பருவமழைக் காலம் என்ற போதிலும், அதற்கான சுவடே இல்லாமல் அக்னி நட்சத்திர நாட்கள் போன்று வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று பகலிலும் வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில் மாலை 3 மணியளவில் தேனியில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சில நிமிடங்களில் பலத்த காற்றுடன் கனமழையாக உருவெடுத்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது.

சாலைகளில் வெள்ளம்

இந்த கனமழையால் தேனி நகரில் உள்ள பிரதான சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகியவற்றில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது. நேரு சிலை சிக்னல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் பழைய பஸ் நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் பஸ் நிலையம் குளமாக மாறியது.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்த அதே நேரத்தில் கம்பம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளின் ஓரத்தில் நடைபாதைகள் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால், பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி தண்ணீருக்குள் இறங்கி பரிதவிப்புடன் நடந்து சென்றனர். அப்போது வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்துச் சென்றதால் பாதசாரிகள் பெரும் அவதியடைந்தனர்.

தேனி நகரில் உள்ள ராஜவாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கி அலையடித்துக் கொண்டு இருந்தது. மழை ஓய்ந்து நீண்ட நேரமாகியும் சாலைகளில் தேங்கிய தண்ணீர் வடியவில்லை.

பஸ்சுக்குள் மழைநீர்

இதற்கிடையே வருசநாட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். வருசநாட்டை கடந்து வைகை நகர் கிராமத்திற்கு சென்றபோது திடீரென கன மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கிய சில நிமிடங்களில் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. வழிநெடுகிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் பஸ்சுக்குள் அதிக அளவிலான மழைநீர் ஒழுகியது.

இதனால் பயணிகள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றனர். ஒரு சிலர் குடைகளை பிடித்தவாறு சீட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் மழை நீர் ஒழுக தொடங்கியதால் பயணிகள் கூட்டம், கூட்டமாக பஸ்சுக்குள் ஆங்காங்கே குவிந்து நின்றனர். அப்போது பச்சிளம் குழந்தையுடன் பஸ் இருக்கையில் அமர்ந்து மழை நீரில் நனைந்தபடி பெண் ஒருவர் பயணம் செய்தார். இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இடிந்து விழுந்த வீடு

தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையின் போது, சுந்தரம்மாள் (வயது 70) என்பவர் வசித்து வந்த வீடு இடிந்து விழுந்தது. அப்போது சுந்தரம்மாள் வீட்டுக்குள் இருந்தார். பலத்த சத்தத்துடன் வீட்டின் சுவர் இடிந்து வெளிப்பக்கமாக தெருவில் விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர் அவர் கட்டிட இடிபாடுகளை கடந்து வெளியே வந்தார். வீட்டில் இருந்த பொருட்களின் மீதும் சுவர் விழுந்ததால் பாத்திரங்கள் உள்பட பல பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் அந்த வீட்டின் மின் இணைப்பு வயர்கள் அறுந்து விழுந்து கிடந்தன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மின்வாரிய பணியாளர்கள், அந்த வீட்டுக்கான மின் இணைப்பை துண்டித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டியில் இருந்து தெப்பம்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியவில்லை. அந்த பாலத்தில் இயக்கப்பட்ட ஒரு சில வாகனங்களும் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது. குறிப்பாக மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி பரிதவித்தனர். இதன்காரணமாக ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்