நெற்குவியல்கள் நனைந்ததால் விவசாயிகள் கவலை

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரத்தநாடு பகுதியில் நெற்குவியல்கள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-18 20:17 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரத்தநாடு பகுதியில் நெற்குவியல்கள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்கி கிடக்கும் நெல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவியல்- குவியலாக குவித்து வைத்துள்ளனர். குறிப்பாக நெல் கொள்முதல் பணிகள் சற்று மந்தமாகவே நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாமல் விற்பனை நிலையங்களில் நெல்மணிகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர்.

விரைவில் கொள்முதல்

இந்தநிலையில் ஒரத்தநாடு பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெற்குவியல்கள் நனைந்தன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.குறிப்பாக மழையின் காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் கடந்த சில தினங்களாக மேலும் மந்தமாக நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக நாட்கள் மற்றும் வார கணக்கில் சாலை ஓரங்களில் கொட்டி வைத்து காத்து கிடப்பதாகவும், இதனால் செலவுகளும், நெல் சேதாரமும் அதிகமாக ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே ஈரப்பதத்தை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பணியை தாமதம் செய்யாமல், அறுவடை செய்த நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பஸ் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து பயணிகள் அவதிப்பட்டனர். பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீர் என்று மேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சிறு தூறல் சூறைக்காற்றுடன் பலத்த மழையாக மாறியது. இதனால் தெருக்களில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. கடைத் தெருவில் தீபாவளியை முன்னிட்டு போடப்பட்டிருந்த தெரு ஓரக் கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் பக்கத்தில் இருந்த கட்டிடங்கள் ஓரம் ஓடி ஒதுங்கி நின்றனர். பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் மழை நீர் வெள்ளம் போல் புகுந்ததால் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் பயணிகள் நிற்கக்கூட இடமில்லாமல் அவதிக்குள்ளாகினர். புயல் காற்று போல் நீண்ட நேரம் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் விளம்பர போர்டுகள் சரிந்து விழுந்தன. மாலை 4 மணிக்கு சூறைக்காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை 5.30 மணி அளவில் நின்றது. தீபாவளிக்காக குடும்பத்துடன் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கும்பகோணம்

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு கன மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கன மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் இந்த கன மழை காரணமாக தீபாவளிக்காக தரைக்கடை அமைத்துள்ள வியாபாரிகள் விற்பனை வெகுவாக பாதித்துள்ளதாக கவலை தெரிவித்தனர். மழையின் காரணமாக நகரில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். சாலையோர வியாபாரிகள் தங்களது பொருட்களை மழையில் நனையாமல் பாதுகாக்க இடமில்லாமல் வேதனையுடன் தவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்