தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில் தற்போது உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
இதனால் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.