வேலூரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை, கால்வாய் அமைத்தல் நடைபெறும் இடங்கள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. சில தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.
நேற்று பகலிலும் சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் மதியம் 2.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
காட்பாடி 4.6, வேலூர் 6.8, பொன்னை 7.4, அம்முண்டி 8.6, குடியாத்தம் 19, மேலாலத்தூர் 23.6.