தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தூத்துக்குடியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

Update: 2023-09-02 18:45 GMT

தூத்துக்குடியில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது.

வெயில் கொளுத்தியது

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி வந்தது. கோடை வெயில் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றதால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை பெய்யாமல் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

பலத்த மழை

இந்நிலையில் தூத்தக்குடி மாநகர பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை தூறியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

3 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் முத்தம்மாள் காலனி சி.வ.அரசு பள்ளி, பழைய மாநகராட்சி, அரசு ஆஸ்பத்திரி வளாகம், மரக்குடி, போல்டன்புரம் பள்ளி, கடற்கரை சாலை, கரிக்களம் பகுதி, குரூஸ்புரம், கந்தசாமிபுரம், செல்வநாயகபுரம், டி.எம்.சி.காலனி, புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாநகர் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை மேயர் என்.பி.ஜெகன் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார்.

தூத்துக்குடியில் பல மாதங்களுக்கு பிறகு நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டனர்.

ஆறுமுகநேரி- ஏரல்

இதபோல் சாயர்புரம், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஏரல் பகுதியிலும் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது.

ஏரல் காந்தி சிலை அருகில் வாறுகாலில் மழைநீர் நிரம்பி சாலையில் கழிவுநீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்கு தண்ணீர் தேங்கியதால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பஜார் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்