திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கன மழை

திருவாரூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாரான சம்ப நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-02-02 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாரான சம்ப நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வுபகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்தது. இதனால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்வதும், மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் சாரல் மழை பெய்ததால் சம்பா தாளடி அறுவடை பணி பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

கொட்டித்தீர்த்த மழை

நேற்று அதிகாலையில் மழை விட்டு விட்டு பெய்தது. அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழையானது காலை 9 மணிவரை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர் துா்க்காலயா சாலை, கடைவீதி, அண்ணாசாலை, நேதாஜி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, விளமல் பகுதியில் மன்னார்குடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன

மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமம் அடைந்தனர். வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றனர். நகர பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் அதிகளவில் மழை பெய்தது. மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாய்ந்தன.

வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிக்கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் விவசாயிகள் தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்தனர். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை தொடர்ந்தால் அழுகி விடும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உரம், பூச்சி மருந்து தெளித்து காப்பாற்றினோம். தற்போது அறுவடை செய்யும் நேரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன.

மேலும் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உளுந்து, பச்சை பயிர்களும் பாதிக்கப்பட்டது.

வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும். அதன் பிறகு தான் எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியும். இப்படி தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகி வீணாகி விடும் என் வேதனை தெரிவித்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 12 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 25 சதவீத அளவிற்கு அறுவடை பணி முடிவடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த மழை தொடர்ந்தால் வயல்களில் மழை நீர் தேங்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய பலத்த மழை நேற்று பகல் முழுவதும் நீடித்தது. இதனால், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம், கோரையாறு, பொதக்குடி, பூதமங்கலம், நாகங்குடி, பண்டுதக்குடி, ஓவர்ச்சேரி, திருராமேஸ்வரம், பழையனூர், சித்தனங்குடி, ராமநாதபுரம், குலமாணிக்கம், ஓகைப்பேரையூர், பூந்தாழங்குடி, கீழமணலி, வடகோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களிலும் வயல்களிலும், சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது. சம்பா அறுவடை பணிகள் நடைபெறவில்லை.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெய்த மழையால் அம்மையப்பன், காவனூர், எண்கண், அரசவனங்காடு, குளிக்கரை, தாழைக்குடி, அபிவிருத்தீஸ்வரம், களத்தூர் உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. மழை நின்ற பிறகும் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணியை தொடர முடியாது. மழை நின்று தரையின் ஈரப்பதம் காய்ந்த பிறகு மீண்டும் அறுவடை பணி தொடங்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்