திருவாரூர் மாவட்டத்தில் கன மழை

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-09-01 18:08 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பரவலாக மழை

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்தது.

இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து குண்டு, குழியுமாக காட்சியளித்தது. குறிப்பாக விரிவாக்கப்பட்ட நகர் பகுதி, கிராமப்புற சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த மழையின் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தப்படி வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மேலம் கட்டுமானம் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர்.அதிகாலை தொடங்கிய மழை காலை 11 மணி வரை பெய்தது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை மாலை வரை பெய்தது. இதனையடுத்து நேற்று 2-வது நாளாக பகல்முழுவதும், கூத்தாநல்லூர், கோரையாறு, அதங்குடி, மரக்கடை, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, நாகங்குடி, பொதக்குடி, பூதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையினால், ஒரு சில இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், சம்பா, தாளடி சாகுபடிக்காக தெளிக்கப்பட்ட நெல் விதைகள் மூழ்கியது. வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். கடந்த ஆண்டு மழையால் சம்பா, தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி மழையால் பாதிக்கப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருத்துறைப்பூண்டி-46, நன்னிலம்-25, திருவாரூர்-18,வலங்கைமான்-16, பாண்டவையாறு தலைப்பு-14,நீடாமங்கலம்-11, மன்னார்குடி-10, முத்துப்பேட்டை-9, குடவாசல்-8 என பதிவாகியிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்