தஞ்சை மாவட்ட பகுதிகளில் பலத்த மழை

தஞ்சை மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-10-09 20:57 GMT

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதுஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் வியாபாரத்தை தொடங்க உள்ள நிலையில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீபாவளி ஜவுளி எடுக்க பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கும்பகோணம் வர்த்தக பகுதி அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

விவசாயிகள் அச்சம்

மேலும், சம்பா நடவு செய்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக மழைநீரில் மூழ்கி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் ஆங்காங்கே தேங்கும் மழைநீரை வடியச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம்

இதேபோல, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தூரல் மழையாக பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், கடலோர போலீஸ் நிலையம், சுப்பிரமணியர் கோவில் தெரு, சேதுரோடு, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்