ராஜபாளையம் பகுதிகளில் பலத்த மழை

ராஜபாளையம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-08-30 20:48 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பலத்த மழை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. ராஜபாளையம் நகர் பகுதி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், நல்லமங்கலம், புத்தூர், சாஸ்தா கோவில் பகுதி, அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ராஜபாளையத்தில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மழையினால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட அய்யனார் கோவில் சாலையில் பஸ்சும், காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் உள்ள சாலையில் லாரியும் சிக்கி கொண்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

திடீெரன பெய்த மழையினால் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் தங்களது பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடும் வெயில் அடித்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்