புதுக்கோட்டையில் பலத்த மழை
புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பலத்த மழை
புதுக்கோட்டையில் கோடை காலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. பகலில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4.45 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை பரவலாக பெய்ய தொடங்கியது. மேலும் பலத்த காற்றும் வீசியது. பயங்கர இடி, மின்னலும் காணப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது.
வீடுகளில் தண்ணீர் புகுந்தது
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. சாக்கடை கால்வாயில் மழைநீரோடு, சாக்கடை பெருக்கெடுத்து ஓடியது. நகரப்பகுதியில் சாலைகளில் கழிவுநீரும், மழைநீரும் கலந்தோடியது. இதில் வாகனங்கள் சீறியபடி சென்றன. கம்பன் நகர், பெரியார் நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மழை நீரை வாளிகள் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். காற்றில் கம்பன் நகர், பெரியார் நகர், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சில சாய்ந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
பக்தர்கள் அவதி
விராலிமலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அதனை தொடர்ந்து திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த மழையால் விராலிமலை, மேப்பூதகுடி, வானதிராயன்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, நல்லூர், காரையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கீரனூர் சிவன் கோவிலுக்குள மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர். மீண்டும் இரவு மழை கொட்டியது. அய்யப்பன் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
மின்தடை
அரிமளம் ஒன்றியத்தில் உள்ள கடையக்குடி, வன்னியம்பட்டி, நெய்வாசல் பட்டி, பெருங்குடி, நமணசமுத்திரம், கடியாப்பட்டி, ராயவரம், நெடுங்குடி, கீழாநிலைகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த கற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் சாலை மற்றும் பள்ளங்களில் தேங்கி நின்றது. பலத்த காற்றின் காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு ஊர்களில் மின்தடை ஏற்பட்டது. ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான கருப்புடையான்பட்டி, பெருங்களூர், ஆதனக்கோட்டை, குப்பையன்பட்டி, வளவம்பட்டி சொக்கநாதப்பட்டி வண்ணாரப்பட்டி சோத்துப்பாளை சோழகம்பட்டி கல்லுக்காரன்பட்டி புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், சித்தன்னவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கறம்பக்குடியில் நேற்று இரவு ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்தனர். அதேவேளையில் மும்முனை மின்சாரம் போதுமான அளவு கிடைக்காததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த மழை கறம்பக்குடி பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
ஆலங்குடி, திருவரங்குளம், அரசடிபட்டி, செம்பட்டிவிடுதி, இச்சடி, வாராப்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.